வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி 2-வது வார்டில் 29 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி உதவி ஆட்சியர் தலைமையில் பட்டா வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அவர் இந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில குழு உறுப்பினர் ஐ. வி. நாகராஜன், சி. ஐ.டி. யூ. மாவட்ட செயலாளர் முருகையன், விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, சி.ஐ. டி. யூ. மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீசன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.