விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எவ்வாறு பயன்படுத்தி நன்மை அடையலாம் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி 71வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு நடந்தது. அதில் பிரதமர் மோடி பேசும்போது, “பாராளுமன்றம் தீவிர ஆலோசனைக்குப் பிறகு வேளாண் சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகள் அனைவருக்கும் புதிய உரிமை மற்றும் வாய்ப்புகளை அளித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் துலே நகரில் இருக்கின்ற விவசாயி ஜிதேந்திரா போயிஜி, புதிய வேளாண் சட்டத்தை எவ்வாறு பயன் படுத்தியுள்ளார் என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
அவர் தனது விளைநிலத்தில் மக்காச்சோளம் உற்பத்தி செய்து, அதனை வர்த்தகர்களுக்கு சரியான விலையில் விற்க முடிவு செய்துள்ளார். அவர் கொள்முதல் செய்வதற்கு ரூ.3.32 லட்சம் ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு முன் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் பெற்றார். அதில் மீதமுள்ள தொகை 15 நாட்களில் வழங்கப்படும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் புதிய சட்டத்தின் கீழ் மூன்று நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டியது கட்டாயம்.
மேலும் கட்டணம் செலுத்தவில்லை என்றால், விவசாயி புகார் தெரிவிக்கலாம். அதன்படி அவர் புகார் அளித்தார். சில நாட்களில் அவரின் நிலுவைத்தொகை அவரிடம் வந்து சேர்ந்தது. எந்தத் துறையாக இருந்தாலும் சரி, சரியான அறிவு அனைவருக்கும் கூடுதல் பலமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.