தண்ணீர் பாட்டில் நிறுவனத்திற்கு நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் சிவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார். அந்த தண்ணீரை குடித்த பிறகு சிவமணிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் மீதம் இருந்த தண்ணீரை பார்த்த போது அதில் கண்ணுக்கு புலப்படும் பொருட்கள் மிதப்பதை பார்த்து சிவமணி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நெல்லை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் சிவமணி புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நுகர்வோர் சங்கத்தினர் சிவமணி வாங்கிய அதே கடையில் மற்றொரு தண்ணீர் பாட்டிலை பில்லுடன் வாங்கியுள்ளனர்.
அந்த பாட்டில் தண்ணீரிலும் சில பொருட்கள் மிதந்தது. இந்நிலையில் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் சிவமணி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தண்ணீர் பாட்டில் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, வழக்கு செலவு தொகை 2 ஆயிரம் ரூபாய் சேர்த்து 28 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தினர் மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நெல்லை நீதிமன்றம் விதித்த 28 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் 2000 சேர்த்து சிவமணிக்கு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது.