Categories
மாநில செய்திகள்

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை!

கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னை உட்பட 6 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ. ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் ஜனவரி 8ம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் ராஜேஷ் என்பவர் வீடு மற்றும் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவ்பிக் இருவரும் இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி பகுதியில் காஜாமைதீனின் இரண்டாவது மனைவியான இந்திரா காந்தி என்பவரது வீட்டிலும், பட்டாம்பாக்கம் பகுதியில் ஜாபர் அலி, பரங்கிப்பேட்டையில் அப்துல் சமது ஆகியோரது வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் தொடர்ந்து 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |