பெரம்பலூரில் வாகன சோதனையின்போது சரக்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 110 ஆவணமில்லாத பணத்தை தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளில் பரிசு பொருட்கள், வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் ஆகியவை எடுத்து செல்லப்படுகிறதா ? என்று தேர்தல் கண்காணிப்பு குழுவினரும், தேர்தல் பறக்கும் படையினரும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வேப்பந்தட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் தலைமையில், பெரம்பலூர்-துறையூர் சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சரக்கு வாகனத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த வாகனத்தில் சோதனை மேற்கொண்டபோது ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 110 கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த பணம் குறித்து வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் எசனையை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரிடமிருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து பெரம்பலூர் சார் கருவூலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.