காட்டு யானை பள்ளியின் சுற்றுச் சுவரை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, ஸ்ரீ மதுரை போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஸ்ரீ மதுரை ஊராட்சி நியூ லேண்ட் பகுதிக்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை உடைத்துவிட்டது. அதன் பிறகு காட்டுயானை சத்துணவு அறையை உடைத்து அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை தின்று நாசப்படுத்தியுள்ளது.
மேலும் காட்டு யானை அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அட்டகாசம் செய்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். எனவே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.