இந்திய பேட்டர் சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்ததிலிருந்து, சூர்யகுமார் 34 டி20ஐ போட்டிகளில் 1,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார், அவர் 9 அரைசதங்கள் அடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு வலது கை பேட்டர் சூர்யகுமார் முக்கியமான வீரராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இந்திய வீரர் சூர்யாவை புகழ்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியதாவது, சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்ட பிறகு, இந்தியாவின் பேட்டிங் பலம் அதிகரித்துள்ளது) அவர் வைத்திருக்கும் பலவிதமான ஷாட் மற்றும் எந்த பந்து வீச்சாளருக்கு எதிராகவும் அவர் ஆடும் ஷாட்கள் என எல்லா வகையான ஷாட்களும் அவரிடம் உள்ளன. இதன் காரணமாக இந்திய அணியின் டாப் ஆர்டரின் பாத்திரமும் மாறிவிட்டது. ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஃபினிஷராக இருக்கின்றனர்” என்றார்.
மேலும் முன்னாள் பாகிஸ்தான் பேட்டர் மிஸ்பா, டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் குறித்தும் பேசினார், “ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்குப் பிறகு, அவர்கள் (இந்தியா) தங்கள் அணுகுமுறையை மாற்ற முடிவு செய்திருப்பதை நீங்கள் காணலாம். முன்பு அவர்கள் தற்போதைய பாகிஸ்தான் அணியைப் போன்ற ஒரு உத்தியைக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் இங்கிலாந்து போன்ற கொள்கையை எடுத்துள்ளனர் – இது பந்துவீச்சைப் பின்தொடர்வது. அவர்கள் பவர்பிளேயில் அதிகபட்ச ரன்களை எடுக்கிறார்கள், அதன்படி ரோஹித் ஷர்மாவும் கேஎல் ராகுலும் நல்ல துவக்கம் கொடுக்கின்றனர். மேலும் விராட் கோலி கூட வந்து தாக்கத் தொடங்குகிறார்,” என்று சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், அக்டோபர் 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.