திருச்சியை தலையிடமாக கொண்டு இயங்கிவந்த எல்பின் நிதிநிறுவன பங்குதாரர்களில் ஒருவர்தான் அழகிரி சாமி என்ற ராஜா. “அறம் மக்கள் அறக்கட்டளை” எனும் பெயரில் சமூகசேவகர் போன்று மோசடிகளில் ஈடுபடுவது தான் ராஜாவின் முழுநேரப் பணி ஆகும். இவரும் இவருடைய சகோதரர் ரமேஷும் சேர்ந்தும் தங்களது நிதிநிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், 10 மாதத்தில் 2 மடங்காக திரும்பிதரப்படும் என கூறி பொதுமக்களுக்கு வலைவிரித்தனர். அதனை உண்மை என நம்பி பெரும்பாலான முதலீட்டாளர்கள் அந்த நிதிநிறுவனத்தில் பணத்தை போட்டனர். எனினும் சொன்ன நேரத்தில் பணம் திரும்பக்கிடைக்கவில்லை. அப்போது தான் ராஜா ஒரு மோசடி மன்னன் என்று தெரியவந்தது.
முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 400 கோடி ரூபாய்வரை மொத்தமாக சுருட்டி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்த புகாரில் ராஜா, அவரது சகோதரர் ரமேஷ் உள்ளிட்ட 18 பேர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் அவர்களது சொத்துக்களை வழக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையிலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையில் 14-க்கும் அதிகமான மோசடி வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ள ராஜா, ரமேஷ் கும்பல் ஜாமீன் பெற்று வெளியில் வருவதற்கு திணறி வருகின்றனர்.
அதை தடுப்பதற்கும், பறிகொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கும் “புரட்சி குழு” எனும் என்ற பெயரில் தனிக்குழு ஒன்று உருவாகிப் பாதிக்கப்பட்டவர்களே களத்தில் இறங்க முடிவெடுத்து இருப்பதாக ஆடியோ ஆதாரங்கள் வெளிவந்துள்ளது. மோசடி செய்த பணத்தை ராஜா கும்பல் பல ஊர்களில் உள்ள உறவினர்களின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜாவை ஜாமீனில் எடுப்பதற்கு அவரது உறவினர்கள் பலரும் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பித்து, வெளியே சுதந்திரமாக சுற்றி திரியும் மோசடி மன்னன் ராஜாவின் கும்பலை சேர்ந்தவர்களுக்கு தற்போது பணத்தைப் பறிகொடுத்தவர்களால் பிரச்சினை எழுந்துள்ளது.
அவ்வாறு சிக்கிய ஒருவரை தான் கட்டி வைத்து வாயில் துணியை வைத்து, கால்களை விரித்து அடித்துத் துவைத்து பணத்தை இழந்தவர்கள் கோபத்தை காட்டியுள்ளனர். அந்த நிதிநிறுவனத்தில் முதலீடுசெய்து இருப்பவர்களுக்கு அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளைப் பொருளாதார குற்றப் பிரிவினர் முடக்கி, பணத்தை இழந்தவர்களுக்குத் திரும்ப கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். ஆனால் அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.