3 வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி ரோடு அரபுக் கல்லூரி அருகில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு செல்வராஜ்(36), ரமேஷ்(32) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சொந்தமாக அடுத்தடுத்து 3 கூரை வீடுகளில் இந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு மூன்று வீடுகளும் பற்றி எரிந்தது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 3 வீடுகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பணம், 10 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.