அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எஸ்.சி என்று தெரிந்தாலே அவனை இழிவுபடுத்துவது, அவனை தாக்குவது.ஏன் இதுவரைக்கும் வேறு எந்த சமூகத்திலும் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்படுவது இல்லை. இந்தியா முழுவதும் குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பாக மட்டும்தான் இருக்கிறது.
ஏன் இதுவரை எந்த பகையிலும் இன்னொரு சமூகத்தின் குடியிருப்பை இன்னொரு சமூகம் தீ வைத்தார்கள் என்று ஒரு சான்று கூட இல்லை. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது எல்லா சாதியிலும் நடக்கிறது. ஏன் மற்ற சாதிகளுக்கு இடையே ஆணவக்கொலைகள் நடந்ததாக சான்றுகள் இல்லை. முதலியாருக்கு செட்டியாருக்கும் இடையே சாதி மறுப்பு திருமணம் நடக்க வில்லையா? பிள்ளைமார், முதலியார்க்கும் இடையே அல்லது முக்குலத்தோருக்கு இடையே சாதி மறுப்பு திருமணம் நடக்கவில்லையா? இது எவ்வளவு ஆபத்தானது பாருங்கள்.
சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என திமுக இந்த தேர்தலில் தான் திமுக அறிக்கை வெளியிட்ட மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். இது ரொம்ப காலமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மத்திய அரசாங்கத்தின் திட்டத்திலே இருக்கிறது. இன்டர் கேஸ்ட் மேரேஜ் என்பதை அரசாங்கம் ஒரு கொள்கை முடிவாக அங்கீகரித்து இருக்கிறது.
மதம் விட்டு மதம் ,சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டால் அந்த குடும்பத்தினரை இரண்டு சாதிகளை சார்ந்த வரும் புறந்தள்ளி விடுகிறார்கள், அனாதை ஆக்கி விடுகிறார்கள், அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், அவர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.அவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட ஜனநாயக சக்திகள் எடுத்த முடிவு அது. திருமாவளவன் எடுத்த முடிவு அல்ல, திமுக எடுத்த முடிவு அல்ல…
இப்பொழுதைக்கு இந்த தேர்தல் எடுத்த முடிவு அல்ல. ஆனால் சாதிவெறியர்கள் எப்படி பரப்புகிறார்கள் ? நம் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக… எவ்வளவு மோசமான ஆபத்தான சக்திகள் இவர்கள். இவர்களை அல்லவா தீய சக்திகள் என்று ஜனநாயக சக்திகள் அடையாளம் காட்ட வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.