பொங்கல் பரிசு தொகுப்பில் நடந்த ஊழலை மறைக்கவே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்ததாக கேபி அன்பழகன் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் உயர் பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சுமாராக 16 மணி நேரம் நடந்த இந்த சோதனை இரவில் முடிவுற்றது. அதன் பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த கே.பி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார், அதில் அவர் கூறியதாவது, “ஆளும் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 21 பொருட்கள் இருக்கும் என கூறிவிட்டு வெறும் 15 பொருட்களை கொடுக்கப்பட்டிருந்தது. இதன் கொள்முதல் விலை சுமார் 1300 கோடி என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
இதனால் பயம் அடைந்த திமுக அரசு மக்களை திசை திருப்பவே எனது வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்த திட்டம் தீட்டியது. ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனது வீட்டில் எந்த பணமோ, நகையோ எதையும் கைப்பற்றப் படவில்லை என தங்கள் கைப்பட எழுதிக் கொடுத்து விட்டனர். ஆனால் ஊடகங்கள் உண்மைக்குப் புறம்பாக எனது வீட்டில் கட்டுகட்டாக பணம் நகை எடுக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளனர். அவ்வாறு செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்களை தற்போது திருத்தி உண்மை செய்தியை வெளியிடுமாறு கூறியுள்ளோம் . அவ்வாறு அவர்கள் செய்யாத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். தற்போது திமுக அரசுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக வருமான வரித்துறை அதிகாரிகளை எனது வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். இவ்வாறாக பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு இறங்குவது கண்டனத்திற்குரிய விஷயமாகும்.” இவ்வாறு அவர் கூறினார்.