சென்னையில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த குளிர்சாதன மெக்கானிக்கை கொலை செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை ஜல்லடியன்பேட்டை ஏரிக்கரையில் கழுத்து, மர்ம உறுப்பு அறுக்கபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டதன்படி , சேலையூர் உதவி கமிஷனர் முருகேசன், பள்ளிக்கரணை காவல்துறை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரித்தபோது, ஜல்லடியன்பேட்டை நெசவாளர் நகர் ராஜீவ்காந்தி தெருவில் வசித்துவந்த குளிர்சாதன மெக்கானிக்கான நரேஷ்(29) என்பது தெரியவந்தது. இவர் மோட்டார் வாகனத்தில் அண்ணா சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது 3 மோட்டார் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்து ஏரிக்கரையில் வீசி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியபோது, அதே பகுதியை சேர்ந்த 28 வயதான அருண்பாண்டியன் என்பவருடைய மனைவிக்கும் நரேஷ்க்கும் கள்ள தொடர்பு இருந்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எச்சரித்தும் அவர்கள் கள்ள உறவை விடவில்லை என்பதால் அருண்பாண்டியன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நரேஷை கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அருண் பாண்டியனையும், அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அருண்பாண்டியன், அவரது நண்பர்களான 27 வயதான திலீப் என்ற அஜித், 27 வயதான அருண், 27 வயதான சஞ்சய் ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.