சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்குபகுதியில் புரட்சி பயணம் எனும் பெயரில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, இன்று அ.தி.மு.க மூத்ததலைவர்களில் ஒருவராக உள்ள தங்கமணி மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தங்கமணியின் சொந்த ஊரான பள்ளிப் பாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தன்தலைமையில் அ.தி.மு.க மீண்டும் இணையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டதுதான் திமுக-வின் சாதனை ஆகும். அ.தி.மு.க-வை மீட்பதுதான் என் முழு பணி. வரலாறுள்ள வரையிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாப்பெரும் தலைவர்களை யாரும் மறக்கமுடியாது. 2024 ஆம் நாடாளுமன்ற தேர்தலில் என் தலைமையில் அ.தி.மு.க நிச்சயம் வெற்றிபெறும். தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை.
இதனிடையில் மின்சார கட்டணம் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய ஒன்று. 63 % பேர் 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த கூடியவர்களாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மின் கட்டணம் உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிறு குறு தொழில்கள் மூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழகதொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுக-வை மீட்பேன். அதிமுக-வில் இருந்து அனைவரையும் சேர்த்துகொள்வதுடன், அதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் தனக்கு முக்கியம் என அவர் தெரிவித்தார்.