கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் சாலையில் ராஜஸ்தானை சேர்ந்த மகேந்திரராம் என்பவர் அடகு கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவர் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு வெள்ளி கொலுசை அடகு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது கொலுசை மீட்க வந்துள்ளார். அப்போது அரவிந்த் 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனது கொலுசை தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் மகேந்திரன் 3 ஆயிரத்து 200 ரூபாய் கொடுத்தால் மட்டுமே கொலுசை தருவேன் என கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த அரவிந்த் கடையில் இருந்த கண்ணாடியை உடைத்து மகேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.