திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டியில் தங்கவேல் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் குருநாதன் (70), பெருமாள் (65) ஆகிய இருவரும் அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இதை வெளியில் சொல்லக்கூடாது, அவ்வாறு சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கூறி மூன்று பேரும் மாணவியை மிரட்டியுள்ளனர். இதனால் உயிருக்கு பயந்து அந்த மாணவி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலர், அந்த மாணவியை தங்கவேல் தனியாக அழைத்துச் செல்வதை பார்த்துள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து தனக்கு செய்த பாலியல் கொடுமைகளை தனது பெற்றோரிடம் கண்ணீர் மல்க அந்த மாணவி கூறினார். அதை கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பெருமாள், தங்கவேல், குருநாதன் ஆகிய மூன்று பேரின் மீதும் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.