இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகளை காட்டு யானை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் காட்டுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வீடுகளை சேதப்படுத்துவது மற்றும் பயிர்களை அழிப்பது போன்றவை வாடிக்கையாக நடந்து வருகிறது.
எனவே காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அஞ்சூரான்மந்தை கிராமத்தில் வசிக்கும் ராம்ராஜ் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்துள்ள ஒற்றை காட்டு யானை இருவரையும் விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தையும் மகளும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் இருந்து ரோட்டின் அருகிலுள்ள பெரிய பள்ளத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்தி விட்டு ஒற்றை காட்டு யானை அங்கிருந்து சென்றது. அதன்பின் சிறிது காயமடைந்த தந்தை மகள் இருவரும் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.