திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நந்தவனப்பட்டியில் பெருமாள்-மயில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பெருமாள் ஒரு கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளார். அந்த கன்று வளர்ந்து தற்போது தெய்வீகத் தன்மை உடையதாக காணப்படுகிறது. அதாவது கடந்த பல மாதங்களாக கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும் அந்த பசு 24 மணி நேரமும் பால் கறக்கிறது. எந்த நேரத்தில் கறந்தாலும் அந்த பசு பால் தருகிறது. இதனை அறிந்த ஊர் மக்கள் தங்களது குடும்பத்தில் பிரச்சனை இருந்தால் பசுவுக்கு கீரை, புல் கட்டு மற்றும் தீவனங்களை கொடுத்து அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் பெருமாள் தினமும் பசுவை குளிப்பாட்டி, மஞ்சள் பூசி அலங்கரித்து, அது கறக்கும் பாலினை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். தெய்வீக தன்மையுடைய அந்த பசுவினை ஊர் மக்கள் ஆச்சரியத்துடன் வணங்கி செல்கின்றனர். இதுகுறித்து பெருமாள் கூறியதாவது, நான் கூலி வேலை பார்த்த போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தேன். இந்த பசு வந்த பிறகு அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டது. இதனை காண ஏராளமான ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.