10 வயது சிறுமிக்கு 74 வயதான முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் 10 வயது சிறுமி அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் வீட்டின் அருகில் 74 வயதான முதியவர் ஒருவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று 10 வயது சிறுமி மளிகை கடைக்கு சென்று பொருள் வாங்க சென்றபோது, சிறுமிக்கு இனிப்பு வழங்கிய முதியவர் அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில் பெற்றோர்கள் இது குறித்து அவரிடம் விசாரிக்க, நடந்த அத்தனையும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது குழந்தையின் நிலையை கண்டு மன அழுத்தத்தில் இருந்த தந்தை நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.