மயிலாடுதுறையில் கணவர் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோவில் அருகே இருக்கும் நல்லுச்சேரி கூடலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் குமார்(35). இவருக்கு புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்(37) என்ற மனைவி இருந்துள்ளார். ஹேமா ஜூலியட் சங்கரன்பந்தலில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த 6 மாத காலமாக ஹேமா ஜூலியட் கீழப்பாதி வாய்க்கால் கரை தெருவில் உள்ள தனது தந்தை அய்யா பிள்ளை என்பவர் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் தனியார் பள்ளி ஆசிரியரான ஹேமா ஜூலியட் நேற்று மாலை பள்ளி பணியை முடித்துவிட்டு தனது தந்தை வீட்டிற்கு செம்பனார்கோவில் கடைவீதிக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த வினோத்குமார் தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது என்று கூறி மனைவியை தனது வீட்டிற்கு குடும்பம் நடத்துவதற்கு அழைத்துள்ளார்.
இதற்கு ஹேமா ஜூலியட் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த விக்டர் வினோத்குமார் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த அந்த இடத்தில் மனைவி ஹேமா ஜூலியட் கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டார். இதில் படுகாயமடைந்த ஹேமா ஜூலியட்டை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.