தனது உடலில் 600 டாட்டூக்களை குத்திய மாடல் அழகியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதிக்கு 26 வயதுடைய ஆம்பர் லுக் என்ற டாட்டூ மாடல் அழகி ஷாப்பிங் சென்றுள்ளார். இந்த அழகி உடல் முழுக்க டாட்டூ வரைந்திருந்ததால் அவரது தோற்றத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து வெறுத்துப் பார்த்தனர். மேலும் சிலர் அவரை கேவலமாக பேசியும் சைகைகளையும் காட்டியுள்ளனர்.
இதுகுறித்து இந்த டாட்டூ மாடல் அழகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது “இன்று நான் ஷாப்பிங்க்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்த மக்கள் கிண்டல் செய்தனர். அவர்களின் எதிர்வினையை பார்த்து முதலில் ஆச்சரியமடைந்தேன்.
பின்பு அவர்கள் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் சமூகத்திற்கு அப்பாற்பட்டவளாக சிலர் பார்த்தனர். நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. என் பின்னால் வந்தவர்கள் அல்லது நான் கடந்து சென்ற நபர்கள் என்னை அசிங்கமாக திட்டினார்கள். இந்த சமூகத்தில் ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது?. உங்களைப் பற்றி தெரியாத ஒருவர் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் வேற்று கிரகவாசி போன்று உணர்ந்தேன். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எதற்காக விஷமத்தனமாக பேசுகின்றீர்கள்? பொது இடங்களில் என்னிடம் எதிர்மறையான கருத்துகளை கூறுவோரிடம் இனிமேல் நின்று கூட பேசமாட்டேன்.
என்னை அவர்கள் முறைத்துப் பார்த்தால், நானும் அவர்களை முறைத்துப் பார்ப்பேன். எனது உடலில் அதிகளவு டாட்டூ மை வரையப்பட்டுள்ளதால் அவர்கள் என்னிடம் பாகுபாடு காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று அவர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த டாட்டூ மாடல் அழகி தனது உடலில் சுமார் 600க்கும் மேற்பட்ட டாட்டூ குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.