செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணிமாறனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மணிமாறன் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் எண்ணூர் நேதாஜி நகரில் இருக்கும் மணிமாறனின் நண்பர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த மணிமாறன் நள்ளிரவு நேரத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் அவர் கீழே இறங்கி வர மறுத்துவிட்டார். இதனால் தீயணைப்பு படை வீரர்கள் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மணிமாறனை பத்திரமாக கீழே இறக்கி கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் மணிமாறனை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.