அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ட்ரம்பின் ஆதரவாளர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அதாவது தற்போது அமெரிக்காவில் 46 ஆவது அதிபராக ஜோபைடன் பதவியேற்றார். இதனைத்தொடர்ந்து ஜோபைடன் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 6 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
அச்சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தினுள் அதிரடியாக நுழைந்த அப்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தை ஏற்படுத்தினர். இதனால் கலவரத்தை தூண்டுதல் என்ற அடிப்படையில் ட்ரம்ப் மீது கண்டனத் தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த விசாரணை வரும் பிப்ரவரி 8ஆம் தேதியன்று செனட் சபையில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலருக்கு கொலை மிரட்டல்களும், நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறை தாக்குதல் நடத்தப்போவதாகவும் இணையதளங்களில் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் மற்றொரு கலவரம் நடக்கப்போவதை தடுத்து நிறுத்துவதற்காக பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாமல் டிரம்ப் நிம்மதியற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.