சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் 50 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஹைதராபாத்திற்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வைணவ ஆச்சார்யார் ராமானுஜரின் 216 அடி உயர சமத்துவ சிலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சனிக்கிழமை பிற்பகலில் டெல்லியில் இருந்து ஹைதராபாத்துக்கு தனி விமானம் மூலம் வந்து இறங்கினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட பலரும் விமான நிலையம் வந்தனர்.
ஆனால் முதலமைச்சர் சந்திரசேகரராவ் பிரதமரை வரவேற்க விமான நிலையம் வரவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலக தரப்பில் கேட்டபோது, “அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருப்பதால் அவர் பிரதமரை வரவேற்க வரவில்லை.!” என கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா மாநில பாஜக தலைவர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது, “சிறுவர்கள் பள்ளிக்கு செல்ல ஏதோ காரணம் சொல்லி அடம் பிடிப்பது போல சந்திரசேகர ராவ் நடந்துள்ளார்.
இதுவா ஒரு முதலமைச்சரின் நாகரீகம் 800-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளேன் என வெளியில் பெருமை பேசிக்கொள்ளும் சந்திரசேகர ராவுக்கு எந்த புத்தகத்திலும் பிரதமருக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பது பற்றி கூறப்பட வில்லையா..?” என அவர் கேட்டுள்ளார்.