இந்திய அரசு பல சர்வதேச நாடுகளுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கியுள்ளதற்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இந்திய அரசானது சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிப்பில் உருவான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்தியா இந்த தடுப்பூசிகளை சர்வதேச நாடுகள் பலவற்றிற்கும் வழங்கியுள்ளது. அதன்படி பூட்டானிற்கு 1.5 லட்சம் டோஸ்கள் மற்றும் ஒரு லட்சம் டோஸ்கள் மாலத்தீவிற்கும், 10 லட்சம் டோஸ்கள் நேபாளத்திற்க்கும், 20 லட்சம் டோஸ்கள் வங்காளதேசத்திற்கும் இந்தியா இலவசமாக அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரேசில் மொரிஷியஸ், தென்னாப்பிரிக்கா சவுதி அரேபியா, மொராக்கோ போன்ற நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசி வழங்கியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா இந்தியாவின் இந்த செயல்பாட்டிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இது குறித்து, அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய விவகாரங்களுக்குரிய அமைச்சகமானது, தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இந்தியா, உலக சுகாதார முன்னேற்றத்திற்காக லட்சக்கணக்கான கொரோனோ தடுப்பூசிகளை சர்வதேச நாடுகள் பலவற்றிற்கும் வழங்கி உதவியுள்ளது. மேலும் மாலத்தீவு, வங்கதேசம், பூட்டான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. இதனால் இந்தியா, “உண்மையான நண்பன்” என்பதை நிரூபித்துவிட்டது என்று புகழ்ந்துள்ளது.