போதையில் இருந்த நபர் அரசு பேருந்தை ஒட்டி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஈரோடு கொடுமுடி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று தீபாவளிக்காக சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டி வந்துள்ளார். பின்னர் திருச்சி வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி டீ குடித்து விட்டு நேரக்காப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த வழியாக குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென பஸ்ஸில் ஏறி பஸ்சை அங்கிருந்து சிறிது தூரம் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பேருந்தை வாலிபர் ஒருவர் ஓட்டி கொண்டு சென்றதைக் பார்த்த ஓட்டுனரும், நடத்துனரும் ஓடிச்சென்று பேருந்தில் ஏறி நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அந்த வாலிபரை பிடித்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததையடுத்து அந்த வாலிபரை கண்டோன்மெண்ட் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். இதையடுத்து அவர் திருச்சி மாவட்டம் மிளகுபாறையை சேர்ந்த அஜித்குமார் (32) என்பது தெரியவந்துள்ளது. போதையில் இருந்த ஆசாமி பேருந்தை ஓட்டிய போது , அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் நடக்கவில்லை. மேலும் இச்சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.