Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறேன்….. “1 1\2 கோடி ரூபாயை இழந்த என்ஜினியர்”…. போலீஸ் அதிரடி…!!

1 1\2 கோடி ரூபாய் மோசடி செய்த பட்டதாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி அருகே செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எஞ்சினியரிங் முடித்துவிட்டு கனடாவில் உள்ள ஒரு ஆயில் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பச்சையப்பனும்,  அவரது மனைவியும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவர்  2-வது திருமணம் செய்து கொள்வதற்காக இணையதளத்தில் கணவரை இழந்த அல்லது விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்த விளம்பரத்தை பார்த்த சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் பிரகாஷ் என்பவர் பச்சையப்பனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இவர் தனது தங்கை விதவை என்றும் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து பச்சையப்பன் செந்தில் பிரகாஷின் தங்கையுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் செந்தில் பிரகாஷ் பெண் குரலில் பேசி பச்சையப்பனை ஏமாற்றியுள்ளார். அதன்பிறகு ஒரு அழகான பெண்ணின் புகைப்படத்தை தனது தங்கை என கூறி பச்சையப்பனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில் பிரகாஷ் பெண் குரலில் பேசி பச்சையப்பனிடமிருந்து பண உதவி கேட்டுள்ளார்.

இதை நம்பிய பச்சையப்பனும்‌ 1 1/2 கோடி வரை செந்தில் பிரகாஷுக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து பச்சையப்பன் ஒருநாள் சென்னைக்கு வந்து ஒரு நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் செந்தில் பிரகாஷிடம் உங்களுடைய தங்கையை நேரில் சந்திக்க வேண்டுமென கூறியுள்ளார். அதன்பிறகு செந்தில் பிரகாஷ் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று பச்சையப்பனை மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை பறித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன்பிறகு தான் பச்சையப்பனுக்கு செந்தில் பிரகாஷ் பெண் குரலில் பேசி தன்னை ஏமாற்றியது தெரியவந்தது. இதனால் பச்சையப்பன் தனது மனைவியுடன் சமாதானமாக பேசி மீண்டும் அவருடன் இணைந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு வந்த பச்சையப்பன் தன்னிடம் மோசடி செய்த செந்தில் பிரகாஷ் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |