Categories
தேசிய செய்திகள்

“எனது குப்பை எனது பொறுப்பு”… ஈரோட்டில் புதிய முயற்சி…. பிரபலங்களின் புகைப்படங்களுடன் செல்பி எடுக்கும் வசதி….!!!!!!!!!

ஈரோடு மாநகராட்சியில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக குப்பை பிரச்சினை விளங்குகிறது . 60 வார்டுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும் மழைக்காலங்களில் கழிவு சாக்கடையை அடைத்து  பிரச்சினை ஏற்படுத்துவதும்  தொடர் கதையாகவே இருக்கிறது. ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலியிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும் எனும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வீதிகளின் ஓரத்தில் வழக்கமாக குப்பைகள் போடும் இடங்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை செய்ததுடன் மகளிர் குழுக்கள் மூலமாக வண்ணக் கோலங்கள் போடப்பட்டது. இது ஓரளவிற்கு வெற்றியை கொடுத்தது வீதிகளில் குப்பைகளை போடுவது குறைந்தது. ஆனால் குடியிருப்புகளை ஒட்டி உள்ள காலியிடங்கள் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுவது அதிகரித்துள்ளது. இந்த சூழலில் குப்பை சேர்வதை தடுக்க புதிய முயற்சியை ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகங்களுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

ஈரோடு மாநகராட்சி நாலாவது மண்டல உதவி ஆணையர் சண்முக வடிவம் மேற்பார்வையில் சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் தலைமை தூய்மை பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். பொதுமக்கள் அதிகமாக குப்பைகளை போட்டுவிட்டு செல்லும் பகுதிகளில் பிரபலங்களின் வண்ணப் புகைப்படங்களுடன் எனது குப்பை எனது பொறுப்பு எனும் வாசக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் மு க ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் டோனி, நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபலங்களின் புகைப்படங்களும் அதில் அருகில் நின்று எனது குப்பை எனது பொறுப்பு ஏற்ற வாசகத்துடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஆர்வமாக பார்க்கும் பொதுமக்களும் தங்கள் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ச்சியாக செல்கின்றார்கள். இது பற்றி சுகாதார அதிகாரி ஜாகிர் உசேன் பேசும்போது பொதுமக்கள் மத்தியில் குப்பை சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்டம் உதவியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |