12ஆம் வகுப்பு மாணவி, தன் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் ஏற்பாடு செய்திருப்பதாக சைல்டு லைனுக்கு போன் செய்து தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்துள்ள மாம்பட்டு கொல்லக்கொட்டாயைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி அதே கிராமத்தில் இருக்கும் அரசு பள்ளியில், 11ஆம் வகுப்பு முடித்து, 12 ஆம் வகுப்பு செல்ல உள்ளார்.. இந்தநிலையில் அந்த மாணவிக்கும் போளூர் வட்டம் திண்டிவனம் ஊராட்சியைச் சேர்ந்த 23 வயதுடைய ராஜிவ் காந்தி என்ற பால் வியாபாரிக்கும் நேற்று முன்தினம், கல்யாணம் செய்து வைக்க இருந்தனர்.
கல்யாண நாளுக்கு முந்தைய தினம் இரவில் அந்த பள்ளி மாணவிக்கு, பள்ளியில் ஆசிரியர்கள் கூறிய சைல்டு லைன் எண்ணான 1098 என்ற உதவி எண் ஞாபகத்திற்கு வந்தது.. இதையடுத்து உடனடியாக அந்த எண்ணுக்கு போன் செய்து, “எனக்கு 16 வயசது தான் ஆகிறது. பிளஸ் 1 முடித்து விட்டு பிளஸ் 2 போறேன். எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை.. 23 வயது உள்ள ஒரு ஆளோட எனக்கு கல்யாணம் செய்ய பார்க்கிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளார்..
இதையடுத்து, போளூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். காவல்துறையினர் வருவதையறிந்த மணமகன் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகினர். சமூகநலத் துறை அதிகாரிகள், மாணவியின் பெற்றோரிடம் பேசி அறிவுரை சொல்லி மாணவியை மீட்டு, திருவண்ணாமலை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்..