லஞ்சம் வாங்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சேலையூர் திருவஞ்சேரி கிராமத்தில் பியூலா சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் தீபா பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என கூறியுள்ளார். இதனை கேட்ட பியூலா சார்லஸ் உடனடியாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரி தீபாவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து பியூலா சார்லஸ் அந்த பணத்தை தீபாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் தீபா மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் தனலட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.