ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார். அதாவது கடந்த மாதம் இறுதியில் எலான் மஸ்க் டுவிட்டரில் குறைபாடுகள் உள்ளதாக கூறி ஒரு புதிய சமூக வலைதளத்தை அதற்கு மாற்றாக நிறுவ திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கினார்.
இதன்மூலம் டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைந்து எலான் மஸ்க் சாத்தியமான மாற்றங்களை டுவிட்டரில் கொண்டுவர பரிந்துரைப்பார் என்று அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் டுவிட்டர் நிறுவனமும் தங்கள் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைவார் என்று கூறியிருந்தது. ஆனால் அதனை எலான் மஸ்க் மறுத்து விட்டார். மேலும் தனக்கு டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய விருப்பம் இல்லை என்றும் கூறிவிட்டார்.