அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள கூட்டப்பள்ளி காலனியில் சாலை மற்றும் சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் நடைபெற்று வந்த சாலை பணிகளும் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த பெண்கள் திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற திருச்செங்கோடு காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலந்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.