தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவு இருக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக-வில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு இடையே நிலவும் மோதலால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இனியும் அவ்வாறே இருக்கும் என்று டிவிட்டரில் அவர் குறிப்பிடுகிறார்.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.” என்ற கீதா உபசாரத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதனிடையே தேனி அருகே உள்ள நாகலாபுரம் செல்லும் வழியில் அரண்மனை புதூரில் நாளைய முதல்வரே வருக என ஓ. பன்னீர் செல்வத்திற்கு 100-அடி நீள பேனர் வைக்கப்பட்டுள்ளது மலர்தூவி அவரை கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முகாமிட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கட்சி நிர்வாகிகளையும், ஆதரவாளர்களையும் அவர் தொடர்ந்து சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். வரும் 7-ம் தேதி பெரிய குளத்திலேயே தங்கியிருக்க ஓ. பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று பிற்பகலில் அவர் சென்னை புறப்படுகிறார்.சென்னையில் அமைச்சர்கள் அவரை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.