சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் மறைந்த நடிகர் விவேக் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகரான விவேக் ஆரம்ப காலத்தில் கே பாலச்சந்தர் அவர்களுக்கு திரைக்கதை எழுதுவதில் உதவியாளராக இருந்தவர் . இந்நிலையில் முதன்முதலாக விவேக் ஒரு படத்தை இயக்க இருந்ததாகவும் அந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘பத்மஸ்ரீ திரு. விவேக்கின் மறைவு நம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு நல்ல மனிதர், சமூக ஆர்வலர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர் மட்டுமல்லாது எதிர்கால ஒரு சிறந்த இயக்குனரையும் நாம் இழந்துவிட்டோம்.
Rest in peace Vivek sir. pic.twitter.com/87SWdTMS6G
— TG Thyagarajan (@TGThyagarajan) April 17, 2021
ஆம், கடந்த ஒரு மாத காலமாக எங்கள் சத்யஜோதி நிறுவனத்திற்கு வந்து எங்களது தயாரிப்பில் தான் அவருடைய முதல் படத்தை இயக்கவேண்டும் என்று விருப்பப்பட்டு பலமுறை கதை ஆலோசனையில் ஈடுபட்டு படப்பிடிப்புக்கான முன்னேற்பாடுகளையும், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் தருவாயில் அவர் மறைந்த செய்தி எங்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற மற்றுமொரு பரிமாணத்தை நம்மிடையே காண்பிக்கும் முன்பே இறைவனடி சேர்ந்தது நமது துரதிர்ஷ்டமே. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.