பீகாரில் மருந்து ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டில் முழுதும் அடுக்கி வைக்கக்கூடிய அளவுக்கு கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பீகார் தலைநகரான பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திரகுமார். மருந்து ஆய்வாளராக பணியாற்றும் இவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். இச்சோதனையில் அதிகாரிகளே ஆச்சரியம் அடையும் வகையில் கட்டுக் கட்டாக வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது. ரூபாய் 100இல் இருந்து ரூபாய் 2,000 வரை அனைத்து வகை நோட்டுகளிலும் கட்டுக் கட்டாக பணம் இவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த பணத்தை ஒரு படுக்கை முழுதும் பரப்பி வைத்த அதிகாரிகள் அவற்றை எண்ணி முடிக்க பல மணிநேரம் எடுத்துக் கொண்டனர். பின் ஒரு கட்டத்தில் கைகளால் எண்ணி முடிக்க முடியாது என்பதால் பணம் எண்ணும் இயந்திரம் வாயிலாக எண்ணி முடித்துள்ளனர்.
அவ்வாறு வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை சுமார் ரூபாய் 3 கோடி இருக்கும் எனக் கூறியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 36.48 லட்சம் மதிப்பில் தங்க நகை, ரூ.1.66 லட்சம் மதிப்பில் வெள்ளி நகை போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் ரூபாய் 2 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் பினாமி சொத்துக்களை இவர் சேர்த்து வைத்துள்ளதும் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஆவணங்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. இவ்வாறு ஒரு அரசு அதிகாரி தனது வீட்டில் ரொக்கமாகவே சுமார் ரூபாய் 3 கோடி பணத்தை பதுக்கி வைத்திருந்தது அதிகாரிகளை மிரள வைத்துள்ளது.