திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது டி. டி. வி. தினகரன் பேசுகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு யாருடனும் கூட்டணி இல்லை. பணத்துடன் மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகத்திற்கு தக்க பதிலடி மக்கள் கொடுக்கவேண்டும். திமுகவை சேர்ந்தவர்கள் கைகொடுப்பதுபோல் கையில் இருக்கும் மோதிரத்தை திருடி விடுவார்கள். பஜ்ஜி கடையில் பாக்சிங் செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் உடமைகள் சூறையாடப்படும். 1500, 2000 ரூபாய்க்கு ஆசைப்பட்டால் நாடு நாசமாக போகும்.
ஆடு மாடு வாங்குவது போல் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்க துடிக்கிறார்கள். டேவிட் அண்ணாதுரை வெற்றி பெறச் செய்தால் 69 வகை சாதியினருக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி டிஎன்சி சாதி சான்றிதழ் வழங்கப்படும். தொகுதி மக்களின் கோரிக்கைகளான மல்லிகை வாசனை திரவியம் தொழில்சாலை அமைக்கப்படும். அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வடபழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்படும் என வாக்குறுதிகளை அளித்தார். நாவுக்கரசர், முன்னாள் அமைச்சர், சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை நினைத்திருந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம். ஆனால் அவருடைய தந்தை போன்றவர் நேர்மையின் வழி நிற்பவர் என்றார். டிடிவி தினகரன் உசிலையில் தொடங்கி செக்காணூரணி, திருமங்கலம், திருநகர், பழங்காநத்தம், புதூர், செல்லூர் போன்ற இடங்களில் அமமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.