பட்டய படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தையடுத்து மத்திய அரசு தமிழ் மொழியினை பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தற்போது சேர்த்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டுகாலம் முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் அக்கல்லூரியில் தமிழ் மொழி தவிர்த்து வேறு சில மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிவிப்பு வெளியானதும் தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் .தமிழ் மொழி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் , தமிழ் மொழி மீது கலாச்சார படையெடுப்பினை மத்திய அரசு எடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ்மொழியின் தொன்மை,செம்மொழி அந்தஸ்து ஆகியவற்றை கணக்கில் கொண்டு தமிழ்மொழியையும் தொல்லியல் முதுகலை பட்டப் படிப்புக்கான தகுதியில் சேர்க்குமாறு பிரதமர் மோடி அவர்களுக்கு முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார்.
இக்கடிதத்தை அடுத்து செம்மொழியான தமிழ் பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.முதலமைச்சரின் கடிதத்தை ஏற்று உடனே அறிவிப்பினை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.