கூட்டுறவு இளங்கோவனுக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் கூட்டுறவு இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. இளங்கோவனின் நண்பர்களுக்கு சொந்தமான ஆறு வங்கிகளை சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திறந்து அதில் இருந்த சொத்து விவரங்களை பற்றி தகவல் சேகரித்து வருகின்றனர்.
சேலத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இளங்கோவன் இருந்து வருகிறார். எடப்பாடியின் வலதுகரமாக செயல்படும் இளங்கோவன் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் தொடரப்பட்டது. இதனால் அக்டோபர் 22-ஆம் தேதி அவரது வீடுகள் உள்ளிட்ட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் லாக்கர் சாவிகளை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வங்கி லாக்கரை திறந்து அதில் இருந்த சொத்து ஆவணங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் ஆவணங்களில் இருந்து சொத்து தொடர்பாகவும், இளங்கோவன் வெளிநாடுகளில் ஏதாவது முதலீடு செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த விசாரணை எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.