கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அரசு பேருந்து ஒன்று வெள்ளத்தில் மூழ்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளத்தின் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டையும் புறநகர் பகுதியான பூஞ்சோலையில் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று மாட்டிக்கொண்டது.
பகுதி அளவு தண்ணீரில் மூழ்கிய நிலையில் பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மாநிலத்தின் மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அணைகளில் நீர் நிரம்பி வருவதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சரின் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.