வேப்பூர் அருகே பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மாணவர்கள் சாலை மறிய போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே ஐவதுகுடி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 570 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த பள்ளிக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பள்ளிக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகின்றது. இதனால் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி ஊராட்சி மன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம் மூலம் புகார் தெரிவித்ததும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளி மாணவர்கள் நேற்று காலையில் ஐவதுகுடி ரயில்வே மேம்பாலம் அருகில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் முறையாக பள்ளிக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.