பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லடிபாளையம், பட்டணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. ஆனால் இந்த பேருந்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலர் பயணிக்கின்றனர்.
மேலும் சில மாணவர்கள் படிகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே அதிக அளவில் பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லடிபாளையம்-பட்டணம் சாலையில் வந்த பேருந்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.அதன் பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.