பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என அச்சத்தில் காதல் ஜோடிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி அருகே உள்ள வெற்றி காளியம்மன் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளிலாளியான இவருக்கு ரித்தீஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் வெள்ளையம்மாள்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் அவரது உறவினர் மகளான ரிவேதா என்பவரும் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 1 1/2 ஆண்டுகளாக ரித்தீஷ்குமாரும், ரிவேதாவும் காதலித்து வந்த நிலையில் இருவரின் வீட்டிற்கும் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவருடைய பெற்றோர்கள் கண்டித்து காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ரிவேதா படிப்பை முடித்ததும் திருமணம் செய்து வைப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்கள் என அஞ்சிய ரித்தீஷ்குமாரும், ரிவேதாவும் கடந்த 8ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனைதொடர்ந்து தேனி கோட்டூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் உடனடியாக ரித்தீஷ்குமார் மற்றும் ரிவேதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவருமே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற வீரபாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.