கிரிமிலேயர் வரம்பு கணக்கீட்டில் சம்பளத்தில் கிடைக்கும் வருவாயை கணக்கில் கொள்ளும் மத்திய அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கல்வி, வேலைவாய்ப்பில் ஒபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் பிரிவில் புதிய திருத்தம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஓபிசி பிரிவில் கிரிமிலேயர் வகைப்படுத்த வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது என்று கூறியுள்ள அவர், விவசாயம் மற்றும் ஊதிய மூலம் பெறப்படும் வருவாயைக் கிரிமிலேயர் பிரிவாக சேர்க்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் மாதிரியை பின்பற்றி ஓபிசி இட ஒதுக்கீட்டை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இட ஒதுக்கீடு கணக்கீட்டில் பழைய முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். கிரிமிலேயருக்கான வருமானத்தை கணக்கிடும் போது, பெற்றோரின் குறைந்தபட்ச வருமானத்தை இணைக்காமல், பெற்றோரின் வருமானம் மற்றும் விவசாயம் வருமானத்தை சேர்த்துக் கணக்கிட்டால் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என்பதை முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.