இஸ்ரேல் பிரதமர், தங்களின் துப்பாக்கிசூடு கொள்கைக்கு, எவரும் ஆணையிட முடியாது கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே போர் பல வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே கடந்த மே மாதத்தில் பாலஸ்தீன தீவிரவாத அமைப்பினர் ஜெனின் நகரத்தில் இருக்கும் முகாமில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, இஸ்ரேல் படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்காக ஷெரின் அபு அக்லே என்ற பெண் பத்திரிகையாளர் சென்றிருக்கிறார். அப்போது, இரண்டு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்ததில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை துப்பாக்கியால் சுட்டது யார்? என்ற குழப்பம் நீடித்தது.
இந்நிலையில், தங்கள் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் அவர் பலியாகி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து, அமெரிக்க அரசு, இஸ்ரேல் நாட்டின் துப்பாக்கி சூடு கொள்கைகள் பற்றி மறு சீராய்வு செய்வதற்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தங்களின் துப்பாக்கி சூடு கொள்கையில் யாரும் உத்தரவிட முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த பத்திரிகையாளரின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் இது பற்றிய அவர் தெரிவித்ததாவது, உயிரை காக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் எங்களின் திறந்தவெளி துப்பாக்கி சூட்டு கொள்கை பற்றி எவரும் உத்தரவிட முடியாது. எங்கள் படையினருக்கு, எங்களின் அரசாங்கம் மற்றும் நாட்டு மக்களின் ஆதரவு முழுமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.