மியான்மர் நாட்டில் சென்ற வருடம் பிப்ரவரி 1ம் தேதி இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன் அந்நாட்டின் தலைவர் ஆங்சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக ஆங்சாங் சூகிக்கு 10 வருடங்களுக்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங்சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஆங்சான் சூகி(77) நோபல் பரிசு பெற்றவர் மற்றும் மியான்மரின் இராணுவ ஆட்சியை எதிர்த்தவர் ஆவார். இவர் ஊழல் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் என குறைந்தது 18 குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இதனிடையில் சூகி தனது மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்கென சூகி நிறுவிய நிறுவனமான டா கின் கீ பவுண்டேசனிலிருந்து ஒரு வீட்டைக் கட்டுவதற்கும், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை தள்ளுபடி விலையில் குத்தகைக்கு எடுத்ததற்கும், நிதியை தவறாகப் பயன்படுத்தியதற்காக இன்று அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாக ஆதாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இத்தண்டனையை “அநியாயமானது” என கண்டித்ததோடு, சூகியை உடனே விடுதலை செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.