வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி அருகே இருக்கும் கொங்கணபள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வனப்பகுதி இருக்கின்ற நிலையில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு இருக்கின்றது. இந்த காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்து விடுகின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இரண்டு காட்டு யானைகள் கிராமத்தில் புகுந்து நந்தகோபால் என்பவரின் விவசாய நிலங்களில் புகுந்து மாமரக் கிளைகளை சேதப்படுத்தி கொண்டிருந்த பொழுது சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர். இதையடுத்து காட்டு யானைகளை பார்த்தவுடன் வெடி, பட்டாசுகள் வைத்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
காட்டு யானைகள் அடிக்கடி கிராமத்தில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் பொதுமக்கள் காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்கு விரட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.