பிரான்ஸில் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் கொரோனாவின் பாதிப்பு விரைவில் குறையும் என்ற நம்பிக்கையில், பயணத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி ஊரடங்கு உத்தரவை தளர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதியின் நெருக்கமான வட்டாரம் தகவல் அளித்துள்ளது. மேலும் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 43,098 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தியேட்டர்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், உணவகங்களில் வெளிப்புற சேவைக்கும் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
மேலும் பொது மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இரவு 7 மணி நேர ஊரடங்கு மற்றும் வீடுகளில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருத்தல் உள்ளிட்ட கட்டுபாடுகள் மே 2-ம் தேதி முதல் தளர்த்தப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து வருகின்ற திங்கட்கிழமை முதல் தொடக்கப்பள்ளி மற்றும் மழலையர் பள்ளி மாணவர்களுக்கும், மே 3-ஆம் தேதி அன்று மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரம் தகவல் அளித்துள்ளது.