உளவியல் சிகிச்சை அளிக்க கோரி நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ், வினய் குமார் சர்மா, அக்சய் சிங், பவன் குமார் குப்தா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 22ம் தேதி, பிப்ரவரி 1ம் தேதி இருமுறை தூக்கு தண்டனை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் கருணை மனு, சீராய்வு மனு என தண்டனையைத் தள்ளிப்போட்டதால் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியை அறிவிக்க அனுமதியளித்தது. இதையடுத்து மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்குள் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெத் வாரண்ட் பிறப்பித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் ஷர்மா, கடந்த 16ம் தேதியன்று சுவரில் தனது தலையை மோதி காயம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, முதலுதவி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் குற்றவாளி வினய் குமார் தரப்பில் அவரின் வழக்கறிஞர் மனு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் வினய் குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். கடந்த வாரம் வினய் குமாரைச் சந்திக்க அவரின் குடும்பத்தினர், பெற்றோர் வந்தனர். அப்போது வினய் குமாரால் தனது தாயைக் கூட அடையாளம் காண முடியவில்லை. தீவிரமான மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்.
தலையிலும், வலது கையிலும் வினய் குமாருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மன நலம் பாதிக்கப்பட்டது போல இருக்கிறார். இதனால் மூத்த உளவியல் நிபுணரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உத்தரவிடவேண்டும் என வாதிட்டார். இந்த மனு கூடுதல் செஷென்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ராணா நாளைக்குள் சிறை நிர்வாகம் பதில் மனுத் தாக்கல் செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளார்.