கனடாவின் புகழ்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை அறக்கட்டளை அமைப்புகள் சேர்ந்து கனடாவின் ரொறன்ரோ பகுதியின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது புகழ்வாய்ந்த ரொறன்ரோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சுமார் 17.1 கோடி பணம் தேவைப்பட்டது.
எனவே அதற்கான நிதி திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மக்கள் நிதியளித்து வந்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் ஒரு கோடி மற்றும் தி.மு.க சார்பாக 10 லட்சம் நிதி வழங்கபட்டது. இந்நிலையில் கனடாவின் நாடாளுமன்றத்தில், தமிழ் இருக்கை ரொரன்ரோவில் அமைக்கப்படுவது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தமிழ் இருக்கை தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை கற்றுத்தருகிறது. மேலும் பல முக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உதவியாக அமையப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.