1000-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட இருப்பது குறித்து டெண்டுல்கர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது, “இந்திய அணி இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா முதல் அணியாக பங்கேற்பது அற்புதமான தருணம் என்று நான் நினைக்கிறேன். நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என அனைவரும் இதற்கு காரணமாக இருந்தனர்.
இதற்கு பங்களிப்பாக ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டும் இருந்தது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 2011-ல் உலக கோப்பையை கையில் ஏந்தியது சிறந்த தருணம் ஆகும். 23 வருடங்களுக்குப் பிறகு உலக கோப்பையை வென்ற தருணம் மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது 1983-ஆம் ஆண்டில் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது தான்.
எனக்கு கிரிக்கெட் மீதான உத்வேகம் ஏற்பட காரணம் இந்த போட்டி தான். பின்னர் 2010-ஆம் ஆண்டில் குவாலியர் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சதம் அடித்தேன். அதுவே என் கிரிக்கெட் வாழ்க்கையில் சர்வதேச போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த தருணம் ஆகும். ஏனென்றால் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்க அணி மிகவும் வலுவானதாக இருந்தது. இருப்பினும் முதல் முறையாக சிறந்த அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தேன்.
அதன் பிறகு மற்ற வீரர்களும் தொடர்ந்து இரட்டை சதம் அடித்தனர். இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருப்பது சிறந்த தருணமாகும். 1000-ஆவது போட்டியில் எனது வாழ்த்துக்களை அனைத்து வீரர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த தொடரை கைப்பற்ற அனைத்து வீரர்களையும் வாழ்த்துகிறேன்” என்று டெண்டுல்கர் கூறியுள்ளார்.