கார் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ அழகியநல்லூர் கிராமத்தில் மருதுபாண்டியன்(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மருதுபாண்டியன் தனது தாயார் முத்து(50), தம்பி அஜித்குமார்(26), தங்கை ஈஸ்வரி(22) ஆகியோருடன் கோவையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்த கார் அழகியநல்லூர் கண்மாய் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.